
‘வாட்ஸ்அப்’ இன் விதிகளை மீறியதற்காக 30 நாட்களில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்களின் ‘வாட்ஸ்அப்’ கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன.
இதன்படி மே 15 முதல் ஜுன் 15 வரை 20 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்கை தடை செய்துள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவிக்கின்றது.
இந்தியாவில் சுமார் 400 மில்லியன் பயனர்களை வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டுள்ளது.
இந்நிலையில் முடக்கப்பட்ட கணக்குகளில் 95 வீதமானவை செய்திகளை அனுப்பக்கூடிய வரம்புகளை மீறியுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் சர்ச்சைக்குரிய புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் பெப்ரவரியில் அறிவிக்கப்பட்டு மே மாதத்தில் நடைமுறைக்கு வந்தன.
இதற்கமைய வாட்ஸ்அப் தனது முதல் மாத நடவடிக்கைகளுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தம் அல்லது போலிச் செய்திகளை அனுப்புதல் மற்றும் மோசடிகள் என்பவற்றுக்காக பயன்படுத்தப்படும் கணக்குகளை தடுப்பது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தி வருவதாக நிறுவனம் கூறியுள்ளது.
அத்தோடு தமது மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒவ்வொரு மாதமும் உலகெங்கிலும் எட்டு மில்லியன் கணக்குகளை வாட்ஸ்அப் தடைசெய்து வருவதாகவுதும் வாட்ஸ்அப் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.