ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணியை உற்சாகப்படுத்தும் விதமாக அதிகாரபூர்வ பாடல் ஒன்றை இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வெளியிட்டுள்ளார்.
இந்திய அணியை ஊக்கப்படுத்துவதற்காக அண்மையில் #Cheer4India என்ற இணையப் பிரசாரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கினார்.
இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து, அனன்யா பிர்லா என்பவர் பாடியுள்ள இந்த பாடலுக்கு ‘ஹிந்துஸ்தானி வழி’ என்று தலைப்பிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.
இந்த கடினமான சூழ்நிலையிலும் ஒலிம்பிக் போட்டிகளுக்காக பாடலை உருவாக்கிய கலைஞர்களை பாராட்டுவதாக இந்திய விளையாட்டு துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான், அனன்யா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சர், இந்தியாவுக்கும் இந்திய அணிக்கும் உற்சாகம் அளிப்பதற்காகவும் இதை அவர்கள் செய்திருப்பதாகவும், இந்தப் பாடலின் மூலம் ஒலிம்பிக் செல்லும் வீரர்களை எவ்வாறு உற்சாகப்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு இதனைப் பகிர்ந்து ஊக்கப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
டோக்கியோ செல்லும் வீரர்களுக்கு முடிந்த அனைத்து வழிகளிலும் உற்சாகம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், ஒலிம்பிக் செல்லும் வீரர்களை வலுப்படுத்தும் விதமாக இந்த பாடல் அமையப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.