October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்துக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் மாட்டிறைச்சி விற்க தடை; அசாம் மாநிலத்தில் புதிய சட்டம்

இந்தியாவில் அசாம் மாநிலத்தில் கால் நடை தொடர்பான புதிய சட்டம் அமுலுக்கு வந்துள்ளது.

அதற்கமைய அசாம் மாநிலத்தில் இந்துக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் மாட்டிறைச்சி கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், கால் நடைகளை வதை செய்யக்கூடாது என சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்துக்கள் அல்லாத ஏனைய இடங்களில் மாட்டிறைச்சி கடைகளுக்கு அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்துக்கள், ஜெயின், சீக்கிய சமூகத்தினர் அதிகம் வாழும் பகுதியில் மாட்டிறைச்சி விற்பனைக்கு அனுமதியில்லை எனவும், கோயில்கள் ஏனைய வழிபாட்டுத்தலங்கள் அமைந்த பகுதியிலிருந்து 5 கி.மீ தூரத்துக்கு மாட்டிறைச்சி விற்பனைக்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு நிர்ணயித்துள்ள இடங்களில் மட்டும்தான் மாட்டிறைச்சியை விற்பனை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல புதிய நிபந்தனைகள் அடங்கிய அசாம் மாநில கால் நடை பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இவ்வாறான சில தடை செய்யப்பட்ட அம்சங்கள் உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசிலும் உள்ளது.

அசாமில் கடந்த மே மாதம் நடந்த சட்டப் பேரவை தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதனையடுத்து அம்மாநில முதலமைச்சராக ஹிமந்தா பிஸ்வ சர்மா பதவியேற்றார்.

இந்நிலையில், கடந்த 8 ஆம் திகதியன்று இந்த கால்நடை தொடர்பான மசோதாவுக்கு அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வ சர்மா ஒப்புதல் வழங்கியிருந்தார்.

அசாம் மாநிலத்தில் புதிய அரசு பதவியேற்ற சில நாட்களில், பசுக்கள் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுவதையும், கடத்தப்படுவதையும் தடுக்க பசு பாதுகாப்பு மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்ற திட்டமிடப்பட்டது.

இதனையடுத்து தற்போது கால்நடை தொடர்பான சட்டம் இயற்றப்பட்டு அமுலுக்கு வந்துள்ளது.

இந்த புதிய சட்டத்தின் கீழ் 14 வயதுக்கு மேற்பட்ட மாடுகள் தான் வதை செய்யப்படலாம் எனவும் கால்நடை மருத்துவர்களின் உடற்தகுதி சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டுமே மாடுகளை வதை செய்யலாம் எனவும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

எக்காரணம் கொண்டும் பசுவையும், கன்றையும் வதை செய்யக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.