January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கேரளாவில் ‘சிகா’ வைரஸ் பரவல் தீவிரம்; தமிழகத்திலும் தடுப்பு நடவடிக்கைகள்

கொசுக்கள் மூலம் பரவக்கூடிய ‘சிகா’ வைரஸ் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேநேரம், கேரளாவில் ‘சிகா’ வைரஸினால் 18 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இந்தியாவிலேயே கேரள மாநிலத்தில் தான் தற்போது கொரோனா வைரஸ் பரவலும் அதிகமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சிகா’ வைரஸ் பரவல் தொடங்கியிருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 15 பேருக்கு ஏற்கனவே ‘சிகா’ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில், தற்போது ஒன்றரை வயது குழந்தை உட்பட மூவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட அனைவரும் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது கேரளாவில் இந்திய மத்திய அரசின் மருத்துவ குழுவினரும் ஆய்வு பணிகளை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவால் ஒரு பக்கம் அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், கேரள மாநிலத்தில் நோய் தடுப்பு பணிகளை மேலும், தீவிரப்படுத்தியுள்ளது அம்மாநில அரசு.

இந்நிலையில் அண்டை மாநிலமான தமிழகத்தில் இதுவரை  ‘சிகா’ வைரஸ் தொற்று கண்டறியப்படவில்லை எனவும் கேரளாவில் திருவனந்தபுரத்தை ஒட்டிய தமிழக எல்லைப் பகுதிகளில் தீவிர தடுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.

மேலும், எந்த பகுதியில் சிகா பரவல் ஏற்பட்டிருக்கிறதோ, அதனை ஒட்டிய தமிழக பகுதிகளில் குறிப்பாக, கொள்ளங்கோடு, பத்துக்காணி, பழுகல், ஆறுதேசம் போன்ற பகுதிகளில் உள்ள 2,660 வீடுகளில் ஆய்வு நடத்தப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிகா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக, கேரளாவில் இருந்து வரும் ரயில்கள், பேருந்துகள், லொறிகள் போன்றவற்றை பரிசோதனை செய்து தமிழகத்துக்குள் அனுமதிக்கும் பணி நடைபெறுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.