(Photo : twitter/@bilal_muhammad4)
வட இந்தியாவில் ஜெய்ப்பூரில், பிரபலமான சுற்றுலா தளமொன்றில் மின்னல் தாக்கியதில் 11 பேர் வரை கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்தனர்.
ஜெய்ப்பூர் நகரில் உள்ள 12 ஆம் நூற்றாண்டுகள் பழமையான அமர் கோட்டையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அமர் கோட்டையின் ஒரு கண்காணிப்பு கோபுரத்தின் மேல் கன மழைக்கு மத்தியில் பலர் செல்பி எடுத்துக் கொண்ட போது இந்த மின்னல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின் போது இருபத்தேழு பேர் கோபுரத்திலும் கோட்டையின் சுவர் மீதும் இருந்துள்ள நிலையில், 5 சிறுவர்கள் உட்பட 11 பேர் வரை உயிரிழந்துள்ளதாக உள்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
சிலர் சுவர்களிலிருந்து தரையில் குதிக்க முயற்சித்த போது காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.இவ்வாறு கோட்டையின் கோபுரத்தில் இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற மின்னல் தாக்குதலில் 28 பேர் வரை உயிரிழந்தனர்.
வட மாநிலங்களில் மின்னல் தாக்கி ஓரிரு தினங்களில் மொத்தமாக 70 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, உயிரிழந்தவர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாவும் காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாவும் அறிவித்துள்ளார்.