November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கில்லை’; ரஜினிகாந்த்

‘எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு இல்லை என்றும் மக்கள் நலப் பணிக்காக முன்பு போல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும்’ என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

இன்றைய தினம் (12) தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்து உரையாடியுள்ளார்.

அதற்கு முன்பாக தனது போயஸ்கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியலுக்கு வருவது குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே தற்போது ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டு அறிக்கையில்,

‘நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு, ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன? நிலை என்ன? என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது. அதை விளக்க வேண்டியது என்னுடைய கடமை.

நான் அரசியல் கட்சி ஆரம்பித்து, அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல பதவிகளையும் பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம்.

கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கில்லை.

ஆகையால், ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு சார்பு அணிகள் எதுவுமின்றி, இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணைச் செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப் பணிக்காக முன்பு போல் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும்’ என்று  ரஜினி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.