இந்தியாவில் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், கேரள மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதேநேரம், இந்தியாவிலேயே கொரோனா அதிகரித்து வரும் மாநிலமாக கேரளா இருப்பதாக சுகாதார துறை குறிப்பிட்டுள்ளது.
கேரள மாநிலத்தில், ஒரே நாளில் 13,563 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து மாநிலம் முழுவதும் 48 மணிநேர தளர்வில்லா முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த 10 நாட்களில் சிகிச்சையில் உள்ள நோயாளிகள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 12 ஆயிரமாக அதிகரித்துள்ள நிலையில், இது மூன்றாவது அலைக்கான அறிகுறியாக கூட இருக்கலாம் எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் கடந்த 10 நாட்களில் 1.01 இலட்சம் நோயாளிகள் குணமடைந்துள்ள நிலையில், 1.23 இலட்சம் பேர் புதிதாக தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக கணக்கிடப்பட்டிருக்கிறது.
கேரளாவில் கொரோனா தொற்று தொடர்ந்து ஏறு முகத்திலேயே இருப்பதாக சுகாதார அமைச்சகம் கவலை வெளியிட்டுள்ளது.
கேரளாவில் கடந்த ஜூன் 28 ம் திகதி சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 96,012 ஆக இருந்தது.
இரு தினங்களுக்கு முன்பு அது 1.08 இலட்சமாக அதிகரித்துள்ளதுடன், தினசரி பாதிப்பு விகிதம் 10 வீதத்துக்கு மேல் உள்ளது என சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கேரளாவில் மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே முழு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அரசு, தனியார் பேருந்து போக்குவரத்து சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுக்கடைகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்தியாவில் தினசரி கொரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 42,766 ஆக இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 4,55,033 ஆக குறைந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.