January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார் ரஜினிகாந்த்

மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருந்த நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்று அதிகாலை சென்னை திரும்பினார்.

ரஜினிகாந்த் நாடு திரும்பியதால் விரைவில் அவர் நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அண்ணாத்த படக்குழுவினர், தீபாவளியையொட்டி இத்திரைப்படம் வெளியாகும் என என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதால் இறுதிக் கட்ட படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகும் என்று கூறப்படுகின்றது.

ஜூன் மாதம் 19ஆம் திகதி மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

அமெரிக்கா சென்ற ரஜினிகாந்த், ஒரு நாள் ஓய்வுக்குப் பின்னர், அங்கு ஏற்கனவே படப்பிடிப்பிற்காக சென்றிருந்த தனுஷின் மனைவியும் ,ரஜினியின் மகளுமான ஐஸ்வர்யாவுடன் 21 ஆம் திகதி ரோஜெஸ்டர் மாயோ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து மூன்று நாட்கள் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது.

தொடர்ந்து 15 நாட்கள் மருத்துவர்களின் அறிவுரைப்படி அங்கு ஓய்வு எடுத்துக் கொண்ட ரஜினிகாந்த், அந்த சமயத்தில் அங்கு தனது ரசிகர்களையும் சந்தித்து புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார்.

பின்னர் கடந்த 6ஆம் திகதி மாயோ மருத்துவமனையில் இறுதியாக மருத்துவ பரிசோதனை செய்து கொண்ட அவர், மீண்டும் சென்னை திரும்பினார்.

சென்னை வந்தடைந்த நடிகர் ரஜினிகாந்தை அவரது ரசிகர்கள் வரவேற்றனர்.

அப்போது அங்கிருந்த செய்தியாளர்களிடம் மருத்துவ பரிசோதனை நல்லபடியாக முடிந்தது என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு மே மாதம் ரஜினிகாந்திற்கு அமெரிக்காவின் மாயோ மருத்துவமனையில் இரண்டாவது முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள முன்னதாக மருத்துவ குழுவினர் அறிவுறுத்தி இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று பரிசோதனைகளை முடித்து திரும்பியுள்ளார்.