July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய அமைச்சரவையில் 43 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!

இந்திய மத்திய அமைச்சரவை இன்று (07) மாலை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில், புதிய அமைச்சர்களாக 43 பேர் பதவியேற்கவுள்ளனர்.

இந்த 43 அமைச்சர்களில் , தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல்.முருகன் அமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார்.

இன்று மாலை 6 மணிக்கு மந்திரி சபை விரிவாக்கம் மற்றும் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்ற பிறகு, மத்திய அமைச்சரவையில் இதுவரை மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

இந்நிலையில் முதன்முறையாக மத்திய அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறுகிறது.மத்திய அமைச்சரவையில் தற்போது 28 வெற்றிடங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

தற்போது மத்திய அமைச்சரவையில் பிரதமர் மோடியை தவிர்த்து 21 கபினட் அமைச்சர்களும், 9 இணை அமைச்சர்களும் (தனிப் பொறுப்பு), 23 இணை அமைச்சர்களும் இருக்கின்றனர்.

இந்நிலையில் மத்திய அமைச்சர்களாக இருந்த சிலர் தங்களது உடல் நிலையை காரணம் காட்டி பதவியிலிருந்து விலகி இருக்கிறார்கள்.

அதிலும் முக்கியமாக தற்போது கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார் மற்றும் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆகியோர் தமது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

ராஜினாமா செய்யப்பட்ட சுகாதாரத் துறை, கல்வித்துறை, தொழிலாளர் நலத்துறை இவற்றுக்கு புதிய அமைச்சர்கள் இன்று அறிவிக்கப்படுவார்கள்.

அதுமட்டுமல்லாமல், சில மத்திய அமைச்சர்கள் மாற்றப்பட்டு அந்த இடங்களுக்கும் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இன்று புதிதாக பதவியேற்கும் 43 பேரில் பலர் புது முகங்களாக, இளைஞர்களாகவும் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆகவே இம்முறை இளைஞர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு அளிக்கப்படும் என நம்பப்படுகிறது.

இந்த அமைச்சரவையில் முன்னாள் முதல்வர்கள் 4 பேர், முன்னாள் மாநில அமைச்சர்கள் 18 பேர், வழக்கறிஞர்கள் 13 பேர், மருத்துவர்கள் 6 பேர், இன்ஜினியர்கள் 5 பேர், முன்னாள் அரசு அதிகாரிகள் 7 பேர் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய அமைச்சர்களில் பா.ஜ.க எம்.பி.க்களான மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா, வருண் காந்தி, ராம்சங்கர் கத்திரியா, அனில் ஜெயின், பகுகுணா ஜோஷி, ஷாபர் இஸ்லாம் ஆகியோருக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேற்கு வங்கம்,கர்நாடகா,ஹரியாணா,ராஜஸ்தான்,ஒடிசா,மகாராஷ்ரா,டெல்லி,பிஹார், உத்தர பிரதேசம், குஜராத் , தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மத்திய அமைச்சரவைக்கு புதிதாக அமைச்சர்கள் நியமிக்கப்பட இருப்பதாக தெரிய வந்துள்ளது.