January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம்!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் முடிவு குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள மம்தா பானர்ஜி, நீதித் துறையை தவறாக சித்தரிப்பதாக கூறி நீதிபதி கௌசிக் சந்தா, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் வென்று அசுர பலத்துடன் மூன்றாவது முறையாக மேற்கு வங்கத்தில் ஆட்சியை தக்க வைத்து கொண்டுள்ளது.

இம்முறையும் மேற்கு வங்க தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸுக்கு போட்டியாக களத்தில் இறங்கிய பா.ஜ.க 77 இடங்களில் மட்டுமே வென்று எதிர்க்கட்சி வரிசையில் தற்போது அமர்ந்திருக்கிறது.

மேற்கு வங்கத்தில் தேர்தல் தொடங்கியதிலிருந்தே மம்தா பானர்ஜிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே மோதல் நிலை வலுப்பெற்று வருகிறது.

நடந்து முடிந்த தேர்தலில் நந்தி கிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பா.ஜ.க வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் 1,956 வாக்குகளில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டார்.

இந்தத் தேர்தல் முடிவு குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் மம்தா பானர்ஜி.

தற்போது இந்த வழக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை நீதிபதி கௌசிக் சந்தா என்பவர் விசாரித்து வருகிறார்.

இந்நிலையில், நீதிபதி கௌசிக் சந்தாவுக்கு, பா.ஜ.க தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.இதனால், வழக்கு விசாரணை ஒரு தலைப்பட்சமாக இருக்கும் எனக் கூறி தலைமை நீதிபதிக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

இதையடுத்து நீதிபதி கௌசிக் சந்தா குறித்த வழக்கிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

நீதிபதி தானாக விலகினாலும், நீதிமன்றத்தின் மாண்பினை சீர்குலைக்கும் விதமாக மம்தா பானர்ஜி நடந்து கொண்டதால் அவருக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்து கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த அபராதத் தொகை கொரோனாவால் பாதிப்படைந்த வழக்கறிஞர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து மம்தா பானர்ஜி தரப்பில் இருந்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.