(Photo/ Twitter)
தமிழகத்தின் காவிரி அணையின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை தடுக்க வேண்டும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேகதாது அணை விவகாரம் குறித்து மத்திய அமைச்சரை சந்தித்து பேசுவதற்காக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று (05) டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.
இதன்போது, இந்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.
தமிழக அரசிடம் ஒப்புதல் பெறாமல், கர்நாடக மத்திய அரசிடம் அனுமதி பெற்றது தவறு என துரைமுருகன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் விவரித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய நீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து தமிழ்நாடு – கர்நாடக அரசுகளுடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் உறுதி அளித்ததாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகம்- கர்நாடக மாநிலங்களுக்கு இடையே காவிரி நீரை பங்கிடுவது தொடர்பாக பல ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வருகிறது.
மேலும் காவேரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், விவசாயிகள் பல கட்ட போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.