July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவின் மஹாராஷ்டிரா சட்ட சபையில் இருந்து 12 பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் இடை நீக்கம்

மகாராஷ்டிரா சட்ட மன்றத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

மஹாராஷ்டிர சட்ட சபையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (05) முதல் இரண்டு நாட்கள் வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் இன்று மகாராஷ்டிரா சட்டசபையின் மழைக்கால முதல் கூட்டத் தொடர் நடைபெற்றது.அப்போது சட்ட மன்றத்தில் தரக்குறைவாக நடந்து கொண்டதாக கூறி பா.ஜ.க.வை சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்களை இடைநீக்கம் செய்து அம்மாநில சபாநாயகர் உத்தரவிட்டிருக்கிறார்.

மகாராஷ்டிர சட்ட மன்றத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கான தீர்மானம் முன்வைக்கப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.

மகாராஷ்டிரா மாநில மக்கள் தொகையில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள தங்களுக்கு தனி இட ஒதுக்கீடு பிரிவு வேண்டும் என கோரி மராத்தா பிரிவினர் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.இதனை அடுத்து மகாராஷ்டிரா அரசு அவர்களுக்கு 16 வீத இட ஒதுக்கீட்டை வழங்கியது.

இந்த இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றது.அங்கு இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்நிலையில்,இன்று கூடிய மகாராஷ்டிரா சட்டப் பேரவையில், மராத்தா இட ஒதுக்கீடு ரத்து குறித்து காரசார விவாதம் நடைபெற்றது.

மகாராஷ்டிராவில் ஆளும் மகா விகாஸ் அகாடி கூட்டணியும், எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவும் சட்டமன்றத்தில் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்து கடும் அமளி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மாநிலத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டும் என கோரி பா.ஜ.எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் சட்ட சபையை சிறிது நேரம் ஒத்தி வைத்துள்ளார் சபாநாயகர்.இதனை அடுத்து தற்காலிக சபாநாயகராக உள்ள பாஸ்கர் யாதவின் அறைக்கு சென்ற பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் ,அவரை தகாத வார்த்தைகளால் பேசி,கடும் ரகளையில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

தொடர்ந்து, அமளியில் ஈடுபட்டதாக சொல்லப்படும் 12 உறுப்பினர்களை ஓராண்டிற்கு இடைநீக்கம் செய்வதாக மகாராஷ்டிரா சபாநாயகர் பாஸ்கர் யாதவ் அறிவித்துள்ளார்.இதனால் மகாராஷ்டிர அரசியலில் தற்போது சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது.