இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தற்போது மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில்,மூன்றாவது அலையை கட்டுப்படுத்துவதற்கான தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந் நிலையில் இந்தியாவில் டெல்டா பிளஸ் கொரோனாவைரஸ் வகை 11 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் மூன்றாவது அலை வரும் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் உச்சம் அடையும் என மத்திய அரசுக்கு கொரோனா தொடர்பாக ஆலோசனை வழங்கும் குழுவின் விஞ்ஞானி மணீந்திர அகர்வால் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
கொரோனா இரண்டாவது அலையினால் ஏற்பட்ட தாக்கம் இன்னும் குறையாத நிலையில்,மூன்றாவது அலையின் தாக்கம் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உச்சத்தை தொடும் என அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா முதல் அலையைவிட, இரண்டாவது அலை கடுமையான பாதிப்புகளையும் அழிவையும் ஏற்படுத்தியது. தற்போது தான் மக்கள் ஓரளவு இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கியிருக்கிறார்கள்.
தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தற்போது மக்கள் பொது வெளியில் அதிக அளவில் நடமாட தொடங்கியிருக்கிறார்கள்.
இந்நிலையில் இரண்டாவது அலையின் போது ஏற்பட்ட பாதிப்புகளில் பாதியளவு தாக்கமானது மூன்றாவது அலையில் ஏற்படும் எனவும் விஞ்ஞானி மணீந்திர அகர்வால் குறிப்பிட்டுள்ளார். .