”கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம் என சொல்லலாமே தவிர முழுமையாக ஒழித்துவிட்டோம் என்று சொல்லமுடியாது.” என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
எந்த கொரோனா அலையையும் தாங்கும் வல்லமை தமிழ்நாடு அரசுக்கு உண்டு என முதலமைச்சர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் வைத்தியசாலைகளில் ஏராளமான படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாகவும், ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் தீவிர சிகிச்சைப்பிரிவு படுக்கைகளும் ஏராளமாக உள்ளன எனவும் அவர் கூறியிருக்கிறார்.
எந்த அலையையும் தாங்கும் வல்லமை அரசுக்கு உள்ளது, தமிழ்நாடு மக்களுக்கும் அந்த நம்பிக்கை இருக்கிறது என அறிவேன் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
மக்களிடம் தான் சொல்லவிரும்புவது ஒன்றுதான், கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம் என சொல்லலாமே தவிர முழுமையாக ஒழித்துவிட்டோம் என்று சொல்லமுடியாது .எனவே விதிமுறைகளை கடைபிடிப்பதில் மக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது என அறிவுறுத்தி இருக்கிறார்.
தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், விதிமுறைகளை பின்பற்றத் தேவையில்லை என நினைக்கக்கூடாது. இன்னும் பள்ளி, கல்லூரிகள் உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்கள் திறக்கப்படவில்லை. இதற்கான காரணம் என்ன என்பதை உணர்ந்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என வீடியோ வாயிலாக எச்சரித்திருக்கிறார்.
இன்றைய தேவை சுயகட்டுப்பாடுதான்!#Covid19 pic.twitter.com/qbO9kmQLnN
— M.K.Stalin (@mkstalin) July 4, 2021
தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு முழுமையாக இன்னும் தடுப்பூசி போடவில்லை, மத்திய அரசு கொரோனா தடுப்பூசிகளை முழுமையாக வழங்கவில்லை எனவும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார் மு க ஸ்டாலின்.
முழுமையான அளவுக்கு தடுப்பூசி கிடைக்காததால் மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் ,மக்கள் அனைவரும் தங்களுக்கு தாங்களே சுயக்கட்டுப்பாட்டை விதித்துக்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.