January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காஷ்மீரில் லஷ்கர் தீவிரவாதிகள் ஐவர் சுட்டுக் கொலை!

கடந்த சில நாட்களாக இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் ட்ரோன் தாக்குதல் அதிகரித்து வருவதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் ஜம்மு காஷ்மீர் விமானப்படைத் தளத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது . அதன் பின்னர் நேற்றும் எல்லையில்ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அங்கு இராணுவத்தினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக தகவல் வெளியானது.

இதனை அடுத்து பாதுகாப்பு படையினர் காஷ்மீரின் சில குறிப்பிட்ட பகுதிகளில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இதில் கடந்த 10 நாட்களில் ஐந்தாவது முறையாக என்கவுண்டர் நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தெற்கு காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை பாதுகாப்புப் படையினர் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதனை அடுத்து இருதரப்புக்கும் இடையில் நீண்ட நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இறந்த தீவிரவாதிகள் அனைவரும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சண்டையின் போது இராணுவ வீரர் ஒருவரும் மரணம் அடைந்ததாக பாதுகாப்பு படைத் தரப்பில் தகவல் கூறப்பட்டிருக்கிறது .

என்கவுண்டரில் கொல்லப்பட்ட 5 தீவிரவாதிகளில் லஷ்கர் ஈ தொய்பா அமைப்பின் தளபதிகளில் ஒருவரும் அடங்குவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தீவிரவாதிகளுக்கு எதிரான இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக காஷ்மீர் போலீஸ் ஐஜி விஜய்குமார் தெரிவித்திருக்கிறார்.

இந்திய ராணுவத் தரப்பில் துப்பாக்கிச் சூட்டின் போது காயமடைந்த ஜவான் காசி ராவ் , ஸ்ரீநகர் இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.