காரைக்காலில் இருந்து இலங்கை யாழ்.துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து திட்டத்தை விரைவில் செயல்படுத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலில் இருந்து ,இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது தொடர்பாக தற்போதைய புதிய முதலமைச்சர் ரங்கசாமியை தென் இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் வெங்கடேஸ்வரன் சந்தித்து பேசியுள்ளார்.
அதேபோல் வெங்கடேஸ்வரன் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்துள்ளார்.
இச்சந்திப்பின் போது இரு நாட்டு நல்லுறவுகள்,அரசியல் பண்பாட்டு தொடர்புகள் குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம்,மருத்துவ சுற்றுலா மற்றும் ஆன்மீக சுற்றுலா என,இலங்கையுடன் போக்குவரத்து தொடர்புகளை எளிமைப்படுத்த உதவும் எனவும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்திருக்கிறார்.
ஆளுநர் தமிழிசையை இலங்கைக்கு வர துணைத்தூதர் வெங்கடேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதனை அடுத்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்த தென் இந்தியாவுக்கான இலங்கை தூதுவர்,காரைக்கால்-இலங்கை இடையிலான பயணிகள் போக்குவரத்து பற்றி கலந்தாலோசிக்கப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்
காரைக்காலில் இருந்து யாழ்.துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து திட்டத்தை விரைவில் செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது .
கப்பல் போக்குவரத்து தொடங்கிய பிறகு காரைக்காலில் இருந்து 3 மணி நேரத்தில் இலங்கையை அடையலாம் என சொல்லப்படுகிறது.