July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆணவத்துக்கும் அறியாமைக்கும் தடுப்பூசி இல்லை;மத்திய அமைச்சர் ராகுல் காந்தி மீது விமர்சனம்

தடுப்பூசி பற்றாக்குறை தொடர்பாக விமர்சனம் செய்த ராகுல் காந்தியை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், காங்கிரஸ் தலைமையை மாற்ற வேண்டிய நேரம் வந்திருப்பதாக சாடியுள்ளார்.

ராகுல் காந்திக்கு என்னதான் பிரச்சினை? தடுப்பூசி தொடர்பாக தான் டுவிட்டரில் வெளியிட்ட தகவல்களை அவர் பார்க்கவில்லையா என கேள்வி எழுப்பியுள்ள மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், ஆணவத்திற்கும் அறியாமைக்கும் தடுப்பூசி கிடையாது என கிண்டலாக பேசியிருக்கிறார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை குறைந்து வரும் சூழ்நிலையில்,மூன்றாவது அலையை தடுப்பதற்கான தீவிர பணிகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது .

அதற்காக மாநிலங்கள் தோறும் தடுப்பூசி போடும் பணியை வேகப் படுத்தியுள்ளது மத்திய அரசு. இந்நிலையில் சில மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக கருத்துகள் பரவி வருகின்றன.

இந்நிலையில் மீண்டும் டுவிட்டரில் அரசை விமர்சித்த ராகுல் காந்தி , ‘ஜூலை வந்து விட்டது, தடுப்பூசி வரவில்லை,எங்கே தடுப்பூசி? என்று கேட்டிருந்தார்.

இதைப் பார்த்து ஆத்திரமடைந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், ஜூலை மாதத்திற்கான தடுப்பூசி தகவல்கள் குறித்து நான் ஏற்கெனவே தகவல்களை வெளியிட்டு இருந்தேன்.

ராகுல் காந்திக்கு என்ன தான் பிரச்சினை? அவர் அந்த தரவுகளை பார்க்கவில்லையா? ஆணவத்துக்கும் அறியாமைக்கும் தடுப்பு மருந்து கிடையாது.

காங்கிரஸ் கட்சி தங்கள் தலைமையை மாற்றுவது குறித்து ஆலோசிக்க வேண்டும் என கிண்டலாக விமர்சித்திருக்கிறார்.

இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.தற்போது 34 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது .

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகளில் 75 சதவீதத்தை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கி வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்திருக்கிறார்.