
சென்னை ஐஐடி வளாகத்தில் இஸ்ரோ விஞ்ஞானி ஒருவரின் மகன் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இஸ்ரோவில் பணிபுரியும் கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ரகு என்பவரின் மகனான உன்னி கிருஷ்ணன் என்பவரே இவ்வாறு சடலாமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஹொக்கி விளையாட்டு மைதானத்தில் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் உடல் தொடர்பில் விசாரணை நடத்தியுள்ளதுடன், உன்னி கிருஷ்ணன் தங்கியிருந்த அறையிலும் சோதனை செய்துள்ளனர்.
இதனையடுத்து அறையில் நடத்தப்பட்ட தேடுதலில் கடிதமொன்றை அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர். அதில், ”நான் என்ன செய்கிறேன் என்பது எனக்கே தெரியவில்லை, மிகுந்த மன அழுத்ததில் இருக்கிறேன்,என் மரணத்திற்கு யாரும் காரணமில்லை.” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக குறித்த நபருடன் அறையில் தங்கியிருந்த நண்பர்கள் மேலும் சிலரிடமும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தண்ணீர் கேனில் பெட்ரோலை எடுத்துச் சென்றுள்ள உன்னி கிருஷ்ணன், தீயிட்டு கொளுத்தி தற்கொலை செய்து கொண்டதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் கூறப்படுகிறது.
ஐஐடியில் அவ்வபோது இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக பலரும் குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
பிடெக் பட்டதாரியான உன்னி கிருஷ்ணன் ஐஐடியில் மாணவர்களுக்கு செயற்திட்ட ஆலோசகராக கடமையாற்றியுள்ளார்.