November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் கொரோனா 3 ஆவது அலையை தடுக்க பிரதமர் மோடி அமைச்சர்களுக்கு அறிவுரை

இந்தியாவில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலையை தடுக்க தீவிர நடவடிக்கை தேவை என அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

அதேநேரம், அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் மூன்றாவது அலையை தடுக்க தேவையான அனைத்து முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தடுப்பூசி திட்டத்தை போர்க்கால வேகத்தில் செயல்படுத்த வேண்டும் என்றும் அப்படி செயல்படுத்தினால் மட்டுமே கொரோனா 3 ஆவது அலையை கட்டுப்படுத்த முடியும் என்றும் மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கொரோனா மூன்றாவது அலையை தடுப்பது மற்றும் தடுப்பூசி திட்டத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இதில் தற்போது நாட்டில் தடுப்பூசி கொள்முதல் செய்யப்படுவதும், இருப்பு வைத்திருப்பதும் போதுமானதாக இல்லை என்று பிரதமர் மோடி தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்ந்து வருகிறது எனவும், அந்த அச்சம் குறையவில்லை எனவும் தெரிவித்த பிரதமர் மோடி, அமைச்சர்கள் தங்களுக்கு உட்பட்ட தொகுதியில் தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் பரவலை முடிவுக்கு கொண்டு வரும் காலத்தில் மிக அதிகமான தொலைவில் நாம் இருக்கிறோம் என்பதை அமைச்சர்கள் நினைவில் கொண்டு, 3 ஆவது அலையை தடுக்க முயற்சிகளை எடுக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தோடு, ஒவ்வொரு துறையிலும் கிடப்பில் உள்ள, முடிக்காத திட்டங்களை விரைவில் முடிக்க அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.