July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய தடுப்பூசிகளை செலுத்தியவர்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் அனுமதி மறுக்கப்படுவதாக புகார்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் அனுமதி மறுக்கப்படுவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இது தொடர்பாக இந்திய அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களுக்கு ‘கோவின் தளம்’ மூலம் வழங்கப்படும் சான்றிதழை ஏற்காமல் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு பதில் அளித்துள்ள இந்திய அரசு, இந்திய பயணிகள் ஐரோப்பிய நாடுகளில் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டால், ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் தெரிவித்துள்ளது.

பைசர், மொடர்னா, பயோன்டெக், வேக்ஸ்ஜெர்வியா, ஜான்சன் அன்ட் ஜான்சன் ஆகிய நான்கு தடுப்பூசிகளை செலுத்தியவர்களுக்கு மட்டுமே ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் வர அனுமதி என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதில் இந்திய தயாரிப்பான கோவாக்சின், கோவிஷீல்ட் செலுத்தப்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை என கூறப்பட்டுள்ளது.

இதில் அஸ்ட்ராசெனிகா நிறுவனம் இந்தியாவில் தயாரித்த கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்தி இருந்தாலும் அந்த சான்றிதழை ஏற்க முடியாது என ஐரோப்பிய ஒன்றியம் கூறியிருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட அஸ்ட்ரா ஜென்கா நிறுவனத்தின் வேக்ஸ் ஜெர்வியா தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட நான்கு தடுப்பூசிகளை செலுத்தாத வெளிநாட்டு பயணிகள், வேறு தடுப்பூசிகள் போடப்பட்ட சான்றிதழை வைத்திருந்தாலும் கட்டாய தனிமைப்படுத்தல் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திய இந்தியர்களை தனிமைப்படுத்தாமல் ,அனுமதி வழங்குவது தொடர்பாக சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதார் பூனாவல்லா, அஸ்ட்ரா ஜென்கா நிறுவனத்தின் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்திடம் அனுமதி கேட்டிருப்பதாக தெரிகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவிக்கையில் ,

தடுப்பூசி சான்றிதழ் ஏற்பது குறித்து ஐரோப்பிய யூனியனின் உயர்மட்ட பிரதிநிதி ஜோஸப் போரல் பான்ட்லெஸுடன் ஆலோசிக்கப்பட்டதாகவும் கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திய இந்தியர்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் அனுமதியளிப்பது தொடர்பாகவும், அங்கீகரிப்பது தொடர்பாகவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

இதனையடுத்து இந்தியாவிலிருந்தும், குறைந்த வருமானம் உள்ள ஏழை நாடுகளில் இருந்தும் வரும் பயணிகள் கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தி இருந்தும், அவர்களை ஏற்காதது சமத்துவமின்மை என கண்டனம் தெரிவித்து, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆபிரிக்க யூனியன் அமைப்பு கடிதம் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.