January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவுடனான தடுப்பூசி ஒப்பந்தத்தை இரத்து செய்தது பிரேசில்

பிரேசில் ஜனாதிபதி ஊழல் செய்துள்ளதாக எழுந்த முறைப்பாட்டை அடுத்து, இந்தியாவிடம் இருந்து கோவெக்ஸின் தடுப்பூசி வாங்கும் ஒப்பந்தத்தையும் பிரேசில் அரசாங்கம் இரத்து செய்துள்ளது.

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் கோவெக்ஸின் கொரோனா தடுப்பூசி வாங்குவதற்கு செய்யப்பட்ட ஒப்பந்தம் இரத்து செய்யப்படுவதாக பிரேசில் அறிவித்துள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 2 கோடி கோவெக்ஸின் தடுப்பு மருந்தை 324 மில்லியன் டொலருக்கு கொள்வனவு செய்ய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தது.

பைஸர் தடுப்பு மருந்துடன் ஒப்பிடுகையில், பாரத் பயோடெக்கின் கோவெக்ஸின் தடுப்பூசியின் விலை அதிகமாக இருப்பதாகவும் பிரேசிலில் விமர்சனங்கள் எழுந்திருந்தன.

கொரோனா தொற்றால் இலட்சக் கணக்கானோர் உயிரிழந்த நிலையில், தடுப்பூசி விவகாரத்தில் பிரேசில் ஜனாதிபதி ஊழல் செய்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

பிரேசில் நாடாளுமன்ற உறுப்பினர்களும், ‘அதிக விலை கொடுத்து பாரத் பயோடெக்கின் கோவெக்ஸினை கொள்வனவு செய்ய வேண்டிய அவசியம் என்ன?’ என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

பிரேசில் அரசுக்கும் இந்தியாவின் பயோடெக் நிறுவனத்துக்கும் இடைத்தரகராக செயல்படும் பிரேசிலின் பிரெகிஸா மெடிகாமென்டோஸ் நிறுவனம் தடுப்பூசி ஒப்பந்தம் மூலம் பெரும் இலாபம் ஈட்டியுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

கோவெக்ஸின் தடுப்பூசி விநியோகத்தில் எந்தவித ஊழலும் இடம்பெறவில்லை என இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் மறுத்துள்ளது.

இந்நிலையில், பிரேசிலில் நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணைக்கு உத்தரவிட்டதை அடுத்து, குறித்த தடுப்பூசி ஒப்பந்தத்தையும் பிரேசில் அரசு இரத்து செய்துள்ளது.