தீவிரவாதிகள் ட்ரோன்களை ஆயுதமாக பயன்படுத்துவதாக உலக நாடுகளுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் விமானப்படைத் தளத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக மத்திய அரசு கூறியுள்ளது.
குண்டுகளை தாங்கிய ட்ரோன்கள் இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாகவும் இந்திய அரசு தெரிவித்திருக்கிறது.
இதன்படி தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை தாங்கி வரும் ட்ரோன்களை புதிய ஆயுதமாக பயன்படுத்த தொடங்கி இருப்பதாக இந்தியா உலக நாடுகளுக்கு கூறியுள்ளது.
இதேவேளை உலக நாடுகள் ஒன்றிணைந்து தீவிரவாத செயல்பாடுகளை தடுக்க , நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா வலியுறுத்தி இருக்கிறது .
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் தீவிரவாதம் குறித்த சிறப்பு விவாதம் நடைபெற்றிருக்கிறது. அதில் இந்தியா ட்ரோன் தாக்குதல் குறித்த அச்சத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.
இந்த தீவிரவாதம் குறித்த விவாதத்தில் இந்தியா சார்பாக மத்திய உள்துறை அமைச்சின் சிறப்பு செயலாளர் வி.எஸ்.கே.கௌமுடி கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார்.
அதில் தீவிரவாதிகள் தற்போது புதிதாக ட்ரோன்களை பயன்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டு இருப்பதாகவும், இதை தடுக்க உலக நாடுகள் முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தி இருக்கிறார்.
தீவிரவாதம், ஒரு நாட்டுக்கான பிரச்னையல்ல, உலக அமைதிக்கும், வளர்ச்சிக்கும் எதிரானது என இந்தியா சார்பில் கலந்து கொண்ட சிறப்புச் செயலாளர் கூறியுள்ளார்.
ஆயுதம் தாங்கிய ட்ரோன்களை பயன்படுத்தி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் போக்கு அதிகரித்துள்ளது. என குறிப்பிட்ட இந்திய சிறப்புச் செயலாளர் இது ஒரு கொடூர தாக்குதல் என தெரிவித்திருக்கிறார்.
நவீன தொழில்நுட்பங்கள் தீவிரவாதிகளுக்கு மிகவும் சாதகமாக உள்ளது எனவும் அவற்றை தவறான செயல்களுக்கு பயன்படுத்துவதாகவும் இந்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு செயலர் வி.எஸ்.கே.கௌமுடி குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
சமூக வலைத்தளங்களையும் தீவிரவாதிகள் பயன்படுத்துவதாக கூறியுள்ள அவர், இந்த விவகாரத்தில் உலக நாடுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் இதை தடுக்க உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஐநா சிறப்பு கூட்டத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.