October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் ‘2-டிஜி’ கொரோனா தடுப்பு மருந்து வர்த்தக ரீதியில் விற்பனைக்கு வந்தது!

இந்தியாவில் தண்ணீரில் கலந்து குடிக்கும் ‘2-டிஜி பவுடர்’ வகையான கொரோனா தடுப்பு மருந்தை வர்த்தக ரீதியாக டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் விற்பனை செய்யவுள்ளது.

இந்த 2டிஜி கொரோனா தடுப்பு மருந்தை தண்ணீரில் கலந்து நோயாளிகள் குடிக்கலாம் எனவும் இந்த பவுடர் வடிவ மருந்து, உடலில் சென்று வைரஸால் பாதிக்கப்பட்ட செல்களை அடையாளம் கண்டுபிடித்து, புதிதாக எந்த செல்களும் பாதிக்கப்படாமல் வைரஸ் வளர்ச்சியையும் தடுப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

2டிஜி கொரோனா தடுப்பு மருந்து மூலம், ஒக்ஸிஜன் உதவியோடு இருக்கும் கொரோனா நோயாளிகள் விரைவில் குணமடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் டி.ஆர்.டி.ஓ எனப்படும் இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து இந்த 2டிஜி பவுடர் கொரோனா மருந்தை தயாரித்துள்ளது.

மூன்றாவது பரிசோதனை வெற்றியடைந்ததை அடுத்து, டிஆர்டிஓ தயாரித்த 2-டிஜி மருந்தை அவசர காலத்துக்கு  பயன்படுத்தி கொள்ள டிசிஜிஐ அனுமதி அளித்துள்ளது.

தண்ணீர் கலந்து குடிக்கும் இந்த பவுடர் கொரோனா மருந்து முதல் கட்டமாக 10 ஆயிரம் டோஸ்கள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

தற்போது இந்த 2-டிஜி மருந்து வர்த்தக ரீதியில் விற்பனைக்கு வருவதாக டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் இந்த மருந்தை கொரோனா நோயாளிகள் வாங்கி பயன்படுத்தி கொள்ள முடியும் எனவும் டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது .