ராஜீவ்காந்தி கொலை வழக்கில் புழல் சிறையில் இருக்கும் பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பரோலில் வெளியே வந்த பேரறிவாளன் கடந்த ஒரு மாத காலமாக தனது தாயாருடன் உள்ளார்.
அப்போது பேரறிவாளனின் உடலில் ஏற்பட்டுள்ள நோய்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டதாக தாயார் அற்புதம்மாள் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், பரோல் விடுப்பில் வீடு திரும்பியிருந்த பேரறிவாளன், ஒரு மாத காலம் நிறைவடைந்த நிலையில் அவர் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதனையடுத்து திடீரென்று இன்று அவரின் பரோல் மேலும் ஒரு மாத காலம் நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகன் பேரறிவாளனுக்கு நீண்ட விடுப்பு வழங்க வேண்டும் என அற்புதம்மாள் கோரிக்கை வைத்திருந்தார்.
அதற்கமைய பேரறிவாளனுக்கு மே 28 ஆம் திகதி முதல் ஒரு மாதகாலம் பரோல் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டதுடன், ஒரு மாத கால பரோலில் விடுவிக்கப்பட்டு, வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஜோலார் பேட்டையில் உள்ள வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார் பேரறிவாளன்.
இதனையடுத்து தாயார் அற்புதம்மாள் மீண்டும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அண்மையில் சந்தித்து, தனது மகன் பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத காலம் பரோல் விடுப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
பேரறிவாளனுக்கு பல்வேறு உடல்நல பாதிப்புகள் இருப்பதாலும், அவருக்கு தொடர் சிகிச்சை தேவைப்பட்டால் அவருடைய பரோலை நீட்டிக்க வேண்டுமென முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தார் அற்புதம்மாள்.
இந்த கோரிக்கை மீது அரசு எந்த முடிவும் எடுக்காத நிலையில், 28 ஆம் திகதி பேரறிவாளன் பரோல் முடிந்து புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இன்றைய தினம் பரோல் நீட்டிப்பு அறிவிப்பு வந்துள்ளதால், பேரறிவாளன் மீண்டும் அவரின் வேலூரில் உள்ள வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.