July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இந்தியாவின் மிகப்பெரிய பொறுப்பை வகிப்பேன் என நினைத்திருக்கவில்லை’; சொந்த கிராமத்தில் குடியரசு தலைவர் உரை

கிராமத்தில் பிறந்த தான் இந்தியாவின் மிகப்பெரிய பொறுப்பை வகிப்பேன் என கனவிலும் நினைக்கவில்லை என இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

தனது சொந்த ஊரான உத்தர பிரதேசத்தில் உள்ள பரவுங் கிராமத்திற்கு சென்றடைந்த குடியரசு தலைவர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, ‘கிராமத்தில் பிறந்த ஒரு சாமானிய மனிதன் நான்.இந்தியாவின் மிகப்பெரிய பொறுப்பை வகிப்பேன் என நினைக்கவில்லை என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மேலும், தான் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், எனது கிராமத்தின் மண் மணமும், இங்குள்ள மக்களும் எனது நினைவில் இருந்து கொண்டே இருப்பார்கள் என உணர்ச்சிபூர்வமாக பேசியுள்ளார்.

அத்தோடு, பரவுங் ஒரு கிராமமே கிடையாது. அது தனது தாய் தேசம், மக்களுக்கு சேவை செய்யும் உத்வேகத்தை இங்கிருந்து தான் நான் பெற்றேன் என குடியரசு தலைவர் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உத்தர பிரதேசத்தில் 3 நாள் சுற்றுப்பயணமாக தனது மனைவி சவீதா தேவியுடன் கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் இருந்து சிறப்பு ரயில் மூலம் புறப்பட்டார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.

இந்நிலையில், கான்பூர் டெஹாத் மாவட்டத்துக்கு ரயிலில் சென்றடைந்த ராம்நாத் கோவிந்த், அங்கிருந்து ஹெலிகொப்டர் மூலம் பரவுங் கிராமத்துக்கு சென்று இறங்கியதும் உணர்ச்சி பெருக்கில் தனது பிறந்த மண்ணை தொட்டு வணங்கினார்.

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமுக்கு பிறகு, 15 ஆண்டுகள் கழித்து, குடியரசு தலைவர் ஒருவர் ரயிலில் சொந்த ஊர் நோக்கி பயணம் செய்தது இதுவே முதல் முறையாகும்.