July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய மாநில மெய்வல்லுனர் தொடர்: இலங்கை வீராங்கனை அமாஷாவுக்கு வெள்ளிப் பதக்கம்

இந்தியாவின் பாட்டியாலாவில் நடைபெற்று வருகின்ற மாநிலங்களுக்கு இடையிலான சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டியில், பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியை 11.59 செக்கன்களில் நிறைவுசெய்த இலங்கையின் அமாஷா டி சில்வா வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

இப்போட்டியை மெதுவாக ஆரம்பித்த அமாஷா டி சில்வா முதல் 30 மீட்டர்கள் பின்னிலையில் இருந்தார். ஆனால், அதன் பின்னர் இந்திய வீராங்கனைகளுக்கு பலத்த போட்டியைக் கொடுத்த அவர், வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தினார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகளாக தனலக்‌ஷ்மி (11.52 செக்.) தங்கப் பதக்கத்தையும், எஸ்.அர்ச்சணா (11.60 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற இந்திய கிரான்ட் பிரிக்ஸ் மெய்வல்லுனர் தொடரில் பெண்களுக்கான 100 மீட்டரில் இந்தியாவின் சாதனையை முறியடித்த நட்சத்திர வீராங்கனை டூட்டி சாந்தை அமாஷா டி சில்வா இந்தப் போட்டியில் தோற்கடித்ததுடன், அவர் நான்காவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தார்.

முன்னதாக இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான 100 மீட்டர் தகுதிச் சுற்றில் பங்குகொண்ட அமாஷா, போட்டியை 11.64 செக்கன்களில் நிறைவுசெய்து இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

குறித்த தகுதிச் சுற்றில் அவருடன் போட்டியிட்ட, உலக கனிஷ்ட சம்பியனான ஹிமா தாஸ் நான்காவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தார்.

இதனிடையே, பெண்களுக்கான 100 மீட்டர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் லக்ஷிகா சுகந்தி  வெண்கலப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்படத்தக்கது.

இந்திய மெய்வல்லுனர் சங்கத்தின் விசேட அழைப்பின் பேரில் இலங்கையைச் சேர்ந்த 10 வீரர்கள் இந்திய மாநிலங்களுக்கு இடையிலான சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.