(Photo: TN DIPR/Twitter)
ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றால் 3 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸடாலின் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ள நிலையில், ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ள தமிழக விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத் தொகை, தடுப்பூசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதன் போது நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர், ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றால் பரிசுத் தொகை வழங்கப்படும் என ஊக்குவித்து பேசியுள்ளார்.
கொரோனா போன்ற தொற்று விளையாட்டு வீரர்களின் சாதனைக்கும், முன்னேற்றத்திற்கு தடையாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகஅவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் முதல்வராக மட்டுமன்றி விளையாட்டின் மீது ஆர்வம் கொண்ட ஒருவராக, வீரர்களின் முன்னேற்றத்திற்கு, வெற்றிக்கு உதவிட தான் எப்போதும் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
மாற்றுத் திறனாளி வீரர், வீராங்கனைகள் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தடுப்பூசி சிறப்பு முகாமை அனைத்து விளையாட்டு வீரர், வீராங்கனைகளும் பயன்படுத்தி உடல் நலத்தை பேணி பாதுகாத்து விளையாட்டு களத்தில் தமிழகத்துக்கு பெருமை சேர்த்திட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்தோடு உலக அரங்கில் விளையாடவுள்ள தமிழக வீரர்களை உற்சாகப்படுத்த வேண்டிய கடமை இந்த அரசுக்கு உள்ளது.
ஆகவே ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்லும் தமிழக வீரருக்கு ரூ.3 கோடியும், வெள்ளிப்பதக்கம் வெல்பவருக்கு ரூ.2 கோடியும், வெண்கலப் பதக்கம் வெல்லும் வீரருக்கு ரூ.1 கோடியும் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இம்முறை ஒலிம்பிக் போட்டியில் தமிழ் நாட்டைச் சேர்ந்த நேத்ரா புகன், வருண் ஏ.தக்கர், கே.சி.கணபதி பாய்மர படகுப் போட்டியிலும், சத்தியன் மற்றும் சரத் கமல் ஆகியோர் டேபிள் டென்னிஸ் போட்டியிலும், பவானி தேவி வாள் சண்டைப் போட்டியிலும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மாற்றுத் திறனாளிகள் ஒலிம்பிக்கில் மாரியப்பன் கலந்து கொள்கிறார். இவர்களுக்கு அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக தலா ரூ.5 இலட்சம் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.