January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழ்நாட்டில் ஜூலை 5 ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிப்பு

தமிழ் நாட்டில் மேலும் சில கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5 ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தொற்று பரவல் குறைந்த அரியலூர்,கடலூர்,மதுரை,திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

“வகை 1” இல் உள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் துணிக் கடைகள்,வணிக வளாகங்கள், நகைக்கடைகளையும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும் வழிபாட்டுத்தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதித்துள்ளது.

தொற்று குறையாத கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பகுதிகளில் முக்கியமாக டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதியில்லை என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

கோவை, நீலகிரி,ஈரோடு, சேலம், கரூர், நாகை, திருச்சி, தஞ்சை, திருப்பூர், திருவாரூர்,மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் டீ கடைகள், வீட்டு உபயோக மின்சார கடைகள், போட்டோ, வீடியோ ஜெராக்ஸ் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

23 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 50 சதவீத பணியாளர்களுடன் ஜவுளி கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

11 மாவட்டங்களில் தியேட்டர்கள் வட்டாட்சியர் அனுமதி பெற்று பராமரிப்பு பணி செய்யலாம்.

சென்னை,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

23 மாவட்டங்களில் திருமண பதிவு தேவையில்லை என தமிழக அரசு கூறியிருக்கிறது.

27 மாவட்டங்களில் கடற்கரையில் நடைபயிற்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மீதமுள்ள 11 மாவட்டங்களில் உள்ளவர்கள் மட்டும் பிற மாவட்ட திருமணத்திற்கு செல்ல இ பதிவு பெற வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.