July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழ்நாட்டில் 9 பேருக்கு டெல்டா ப்ளஸ் கொரோனா தொற்று

தமிழகத்தில் 9 பேருக்கு டெல்டா ப்ளஸ் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் 48 பேருக்கு டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை, மதுரை, காஞ்சிபுரத்தில் டெல்டா ப்ளஸ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்திருக்கிறார்.

கொரோனா மாதிரிகளை பெங்களூருக்கு அனுப்பி பரிசோதனை முடிவுகள் வருவதில் தாமதம் ஆவதால் ,தமிழகத்தில் முதன்முறையாக வைரஸ் பகுப்பாய்வு மையம் தொடங்க இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

மத்திய அரசு மற்றும் ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதலின்படி பரிசோதனை செய்து கொண்டிருக்கும் 14 நிறுவனங்களை தாண்டி, மாநில அரசு இந்த வைரஸ் பகுப்பாய்வை செய்யவுள்ளது .

எதிர்காலத்தில் இந்த வைரஸால் பாதிப்பு அதிகமாகக் கூடாது என்பதற்காக,சென்னையில் புதிய பகுப்பாய்வு மையத்தை நிறுவ முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

இப்போது உள்ள தடுப்பூசியே டெல்டா பிளஸ் வைரஸை கட்டுக்குள் வைத்திருக்கும் எனக் கூறியுள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், இந்த டெல்டா ப்ளஸ் வைரஸ் வகை தமிழகத்தில் இரண்டாவது அலையிலேயே ஏராளமானோருக்கு வந்து போய் இருக்குமோ என்ற ஒரு சந்தேகம் எழுந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இதன் பாதிப்பு தற்போது பெரிதாக தென்படவில்லை எனவும், டெல்டா ப்ளஸ் வைரஸ் தொற்று வந்தவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதித்ததில் அவர்களுக்கு இந்த தொற்று பரவவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.