
தமிழகத்தில் இதுவரை 2,700 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தமிழக அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு வல்லுநர் குழுவின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு குறித்து 13 பேர் கொண்ட சிறப்பு குழுவினர் இடைக்கால அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்தனர்.
இதன்போது, தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் கருப்பு பூஞ்சை பாதிப்பு பதிவாகியுள்ளதுடன், தற்போது நோய் குறித்து விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டுள்ளதால் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படக்கூடிய நோயாளிகளின் தினசரி எண்ணிக்கை 20 ஆக குறைந்துள்ளதாகவும் வல்லுநர் குழு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேநேரம், இதுவரை 148 பேர் கருப்பு பூஞ்சை நோயால் உயிரிழந்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் இறப்பு 6 சதவீதமாக உள்ளது எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை விட குறைவு எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை ,மதுரை, சேலம், ஆகிய மாவட்டங்களில்தான் கருப்பு பூஞ்சை பாதிப்பு அதிகம் உள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனினும் கருப்பூஞ்சை நோயால் பாதித்தவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளித்தால் விரைவில் குணமாகலாம் எனவும் வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை உலகிலேயே இந்தியாவில் தான் கருப்பு பூஞ்சை பாதிப்பு அதிகம் என தெரியவந்திருப்பதாக சிறப்பு மருத்துவ குழுவினர் கூறியுள்ளார்கள்.