January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழினத்தை எங்களால் தான் வளர்ச்சி பெற வைக்கமுடியும்; மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடரின் கடைசி நாளான வியாழக்கிழமை(24) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் உரை ஆற்றினார்.

அப்போது பேசிய மு.க. ஸ்டாலின் தான் அண்ணாவின் அரசியல் வாரிசு எனவும் கருணாநிதியின் கொள்கை வாரிசு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சட்டப் பேரவை ஜூன் 21 அன்று, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் கடந்த 2 தினங்களாக நடைபெற்றது.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய மு.க. ஸ்டாலின் திமுக உடன்பிறப்புகளுக்கும், தோழமைக் கட்சியினருக்கும், தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

1920-ம் ஆண்டு முதல் 1937-ம் ஆண்டு வரை 17 ஆண்டுகள் நீதிக்கட்சி ஆட்சி செய்தது என குறிப்பிட்டு பேசியிருக்கிறார் மு.க. ஸ்டாலின்.

தமிழினத்தை நம்மால் தான் வளர்ச்சி பெற வைக்கமுடியும் என கருதி மக்கள் தமது கட்சியை ஆட்சியில் அமர வைத்திருப்பதாக ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

தன்னுடைய தொலைநோக்குப் பார்வையைத் தான் ஆளுநர் தனது உரையில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

திமுகவை நீதிக்கட்சி என புகழ்ந்த ஸ்டாலின். சமூக நீதியை நீரூற்றி வளர்த்தது நீதிக்கட்சி எனவும் இந்த சமயத்தில் திமுக ஆட்சிக்கு வந்து இருப்பதை தான் பெருமையாக கருதுவதாகவும் கூறியுள்ளார்.

நீதிக்கட்சியின் தொடர்ச்சி பேரறிஞர் அண்ணாதுரை, அண்ணாவின் தொடர்ச்சி கருணாநிதி. கருணாநிதியின் தொடர்ச்சி நான், இந்த அரசு என சட்டப் பேரவையில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய கட்சி உறுப்பினர்கள் பேசியது ,அரசுக்கு அவர்கள் கூறிய ஆலோசனைகளாகவே எடுத்துக்கொள்கிறேன்.ஏனெனில்,நான் அண்ணாவின் அரசியல் வாரிசு, கருணாநிதியின் கொள்கை வாரிசு.

மேலும் இன்றைய விவாதத்தின்போது யானையும் இல்லை மணியோசையும் இல்லை என ஆளுநர் உரையை எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துப் பேசினார்.

அவரது பேச்சுக்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ”பொறுத்தார் பூமியாழ்வார் என்பது பழமொழி.அப்படித்தான் நாங்கள் பத்தாண்டுகள் பொறுத்திருந்து ஆட்சிக்கு வந்துள்ளோம்.

அடக்கப்பட்ட யானைக்கு தான் மணி கட்டுவார்கள்.திமுக அடக்கமுடியாத யானை.யானைக்கு 4 கால்கள் தான் பலம். அதுபோல திமுகவுக்கு சமூக நீதி, மொழிப்பற்று, சுய மரியாதை, மாநில உரிமை போன்ற 4 கொள்கைகள் தான் பலம்.இந்த 4 கொள்கைகளின் அடிப்படையிலேயே திமுக செயல்படும்.

ஆளுநர் உரையில் அரசின் ஓராண்டு காலத் திட்டங்கள் மட்டுமே இடம்பெறும்.ஆளுநர் உரை ஒரு ட்ரெய்லர்தான்.மீதியை பொறுத்திருந்து பாருங்கள் என தமிழக முதல்வர் தெரிவித்தார்.