July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் 2-17 வயது வரையான குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை

இந்தியாவில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் 2 முதல் 17 வயது வரையான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரஞ்சித் குலேரியா தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பாரிய பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், இதற்கான தீர்வு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதுடன், அடுத்தடுத்த அலைகளிலிருந்து தப்பிக்க தடுப்பூசி ஒன்றே சிறந்த வழியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா மூன்றாவது அலையில் குழந்தைகள், கர்ப்பிணிகள் பாதிக்கப்படலாம் என்ற மாறுபட்ட கருத்துகள் நிலவும் சூழலில், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து வரும் செப்டம்பர் மாதம் முதல் 2 – 17 வயது வரை கொண்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என ரஞ்சித் குலேரியா தெரிவித்திருக்கிறார்.

மேலும், இந்தியா இரண்டு கொரோனா அலைகளை சந்தித்து, தற்போது தான் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புகிறது.

இருந்த போதிலும் மக்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காவிட்டால் 6 முதல் 8 வாரங்களில் கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள நேரிடும் என டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் அண்மையில் எச்சரித்திருந்தார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஜூன் 7 ம் திகதி முதல் ,ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதிக்கும் நிகழ்வு தொடங்கியது.

இந்திய மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பின் வல்லுநர் குழுவின் அனுமதியோடு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

3 ஆவது கட்ட கிளினிக்கல் பரிசோதனை முடிவடைந்தால் செப்டம்பர் முதல் குழந்தைகளுக்கு செலுத்த அனுமதி வழங்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

குழந்தைகளுக்கான மூன்றாவது கட்ட பரிசோதனை முடிந்த கையோடு கோவாக்சின் தடுப்பூசியை 2 வயது முதல் உள்ள குழந்தைகளுக்கு செலுத்த மத்திய அரசின் அனுமதியும் கிடைக்கும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.