November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் புதிதாக பரவும் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்றுக்குள்ளான 40 பேர் அடையாளம்!

இந்தியாவில் புதிதாக பரவி வரும் கொரோனா வைரஸ் வகையான டெல்டா பிளஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 40 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

நாட்டில் 2 வது அலையின் போது பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய டெல்டா வைரஸ் தற்போது மரபணு மாற்றத்திற்கு உட்பட்டு, டெல்டா பிளஸ் என்ற வைரஸாக உருவாகி உள்ளதாக மத்திய சுகாதார துறை அறிவித்துள்ளது.

இது மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை கடந்து உடலுக்குள் செல்லும் திறன் கொண்டது என கூறப்படுகிறது.

மிகவும் கொடிய டெல்டா பிளஸ் வகை வைரஸ் மகாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிகம் பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதாக 28 ஆய்வகங்களின் கூட்டமைப்பான இன்சாகோக் தமது ஆய்வில் தெரிவித்துள்ளது.

கேரளாவின் பாலக்காடு மற்றும் பத்தனம் திட்டா மாவட்டங்களிலும், மகாராஷ்டிராவில் ரத்னகிரி மற்றும் ஜல்கான் மாவட்டங்களிலும், மத்திய பிரதேசத்தின் போபால் மற்றும் சிவபுரி மாவட்டங்களிலும் டெல்டா பிளஸ் வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .

இந்நிலையில், ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள பொது சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளில் இன்னும் கவனம் செலுத்துமாறு கேரளா, மகாராஷ்டிரா, மற்றும் மத்திய பிரதேசத்தை இந்திய சுகாதார துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை இன்னும் ஓயாத நிலையில், மூன்றாவது வகையான டெல்டா பிளஸ் பாதிப்பு தொடங்கியிருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து இப்போதே மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.