October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொரோனா 3 ஆவது அலையை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக வேண்டும்’; ராகுல் காந்தி

கொரோனா 3 ஆவது அலையை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொடர்பான வெள்ளை அறிக்கையை ராகுல்காந்தி இன்று (22) வெளியிட்டு காணொளி மூலமாக செய்தியாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, கொரோனா 3 ஆவது அலையை எதிர்கொள்ள நாட்டிற்கு அறிவுறுத்தவே இந்த வெள்ளை அறிக்கை வெளியிட்டதாகவும் அரசை குறை சொல்வதற்காக இல்லை எனவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

மோசமான நிர்வாகத்தால், முதல் மற்றும் இரண்டாவது அலையில் பேரழிவு ஏற்பட்டதாகவும் 3 ஆவது அலை வரும் என நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும் எனவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைவதால், 3 ஆவது அலையை தொடர்ந்து மேலும் பல அலைகள் வரும்.தற்போதைய இக்கட்டான நேரத்தில் தடுப்பூசி போடுவது மிகவும் அவசியம் எனவும் ராகுல் காந்தி அந்த அறிக்கையில் மக்களை வலியுறுத்தியுள்ளார்.

தடுப்பூசி போடும் திட்டத்தை வேகப்படுத்தி அனைவருக்கும் வேகமாக தடுப்பூசி போட வேண்டும் எனவும்,மருத்துவமனைகள், ஒக்சிஜன் படுக்கைகளை தயார்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது அலையின் போது, பலர் ஒக்சிஜன் உதவி கிடைக்காமல் உயிரிழந்ததாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டிய ராகுல், பிரதமரின் கண்ணீர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உறவுகளை இழந்தோரின் கண்ணீரை துடைக்காது.அவர்களை காப்பாற்றாது எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதமர் இந்த கொரோனா விவகாரத்தில் கவனம் செலுத்தாமல், மேற்கு வங்க தேர்தலில் கவனம் செலுத்தியதாக ராகுல் காந்தி அறிக்கை வாயிலாக குற்றம் சாட்டியுள்ளார்.