July 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைக்கு கடத்த முயன்ற இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான ‘அம்பர் கிரிஸ்’ பறிமுதல்

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து இலங்கைக்கு, கோடி ரூபாய் மதிப்பிலான ‘அம்பர் கிரிஸ்’ கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து 6 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

அதேநேரம்,2 கிலோ அளவிலான அம்பர் கிரிஸ் மற்றும் கடத்தலில் பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்ததாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் மெழுகு போன்ற ஒரு பொருளை பையில் மறைத்து வைத்திருப்பது சோதனையில் தெரிய வந்துள்ளது.

அது திமிங்கலம் வாயிலிருந்து உமிழக்கூடிய அம்பர் கிரிஸ் என்றும், வாசனை திரவியம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் முக்கிய  பொருளான இதற்கு சர்வதேச சந்தையில் கோடிக் கணக்கில் மதிப்புள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் 2 கோடி மதிப்புள்ள, 2 கிலோ எடையுள்ள அம்பர் கிரிஸை ஆறு பேரும் இலங்கைக்கு கடத்திச் செல்ல முயன்றுள்ளனர்.

அதன்பின்னர் அங்கிருந்து இந்தோனேசியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

அம்பர் கிரிஸ் 1972 ஆம் ஆண்டு வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பொருளாக கூறப்படுகிறது .

அம்பர் கிரிஸை எங்கிருந்து எடுத்தார்கள் என்பது குறித்து 6 பேரிடமும் விசாரணை நடைபெறுவதாகவும், அம்பர் கிரிஸின் உண்மை தன்மை குறித்து ஆராய ஹைதராபாத்தில் உள்ள நிறுவனத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தலில் ஈடுபட்ட 6 பேரும் தஞ்சாவூர், விருதுநகர், நாகப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்டை என பல்வேறு பகுதிகளை  சேர்ந்தவர்களென்றும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்த தூத்துக்குடி பொலிஸார் 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

இதேவேளை, இந்த பெறுமதியான அம்பர் கிரீஸ், திமிங்கலத்தின் வாயில் உள்ள மெழுகுத் தன்மை வாய்ந்த ஒரு பொருளாகும். திமிங்கலம் வாந்தி எடுக்கும்போது கிலோ கணக்கில் இந்த அம்பர் கிரீஸை வெளியேற்றுவதாக சொல்லப்படுகிறது.

இந்த அம்பர் கிரீஸ் திமிங்கலத்தின் வாயிலிருந்து வெளியில் வரும் போது துர்நாற்றம் வீசினாலும் காய்ந்தவுடன் மிகவும் நறுமணமாக மாறுவதுடன், பெறுமதி மிகுந்த பொருளாக மாறி விடுவதாக மீனவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

உலகில் மிகவும் நறுமணம் மிகுந்த பொருளாகவும், சர்வதேச சந்தையில் மிகவும் விலை போகக் கூடிய ஒரு பொருளாகவும் இந்த அம்பர் கிரிஸ் காணப்படுகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.