July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முகாமுக்கு வெளியே வாழும் இலங்கை தமிழ் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கினார் முதல்வர்

தமிழ் நாட்டில் பல்வேறு பகுதிகளில் முகாமிற்கு வெளியே வாழும் இலங்கை தமிழ் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதற்கமைய 13,553 இலங்கை தமிழ் குடும்பங்களுக்கு 4000 ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு 5.42 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய முதல்வர் ஸ்டாலின், 5 பயனாளிகளுக்கு உதவி வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தமிழ் நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாகவும், ஊரடங்கு காலத்தில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாகவும், பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம் வாழ் இலங்கைத் தமிழ் குடும்பங்களுக்கு 4000 ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படுகிறது.

தமிழ் நாட்டில் தங்கியிருக்கும் இலங்கை தமிழர்கள் பலர் பல்வேறு பகுதிகளில் முகாமிற்கு வெளியேயும் வசித்து வருகின்றார்கள்.

அவர்கள் சிறு தொழில்கள், தினக் கூலி பணிகள் போன்றவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள்.

கொவிட் – 19 தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அவர்களின் நலனை காத்திட, முதல்வர் ஸ்டாலின் முதல் முறையாக முகாமிற்கு வெளியே வாழும் 13,553 இலங்கை தமிழ் குடும்பங்களுக்கு தலா 4000 ரூபாய் வீதம் மொத்தம் 5 கோடியே 42 இலட்சத்து 12 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, இன்றைய தினம் (19)  தலைமைச் செயலகத்தில், இந்தத் திட்டத்தை 5 இலங்கைத் தமிழ் குடும்பங்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.