இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக சிறையில் உள்ள நளினி மற்றும் முருகன் ஆகியோருக்கு உறவினர்களுடன் வட்ஸ் அப் அழைப்பில் பேசுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் லண்டனில் வசிக்கும் உறவினர்களுடன் வட்ஸ் அப் வீடியோ மூலம் பேச அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இலங்கையில் உள்ள முருகனின் தாயுடனும்,லண்டனில் உள்ள முருகனின் சகோதரியுடனும்,வட்ஸ் அப் வீடியோ மூலம் பேச அனுமதி வழங்க கோரி நளினியின் தாய் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வெளிநாடுகளில் வசிக்கும் சொந்தங்களுடன் இருவரையும் பேச அனுமதித்தால்,ராஜிவ் காந்தி கொலை வழக்கின் பன்முக விசாரணை பாதிக்கும் என மத்திய அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் உள்ள உறவினர்களுடன் 10 நாளைக்கு ஒரு முறை,30 நிமிடத்திற்கு குறையாமல் 3 அழைப்புகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக தமிழக சிறைத்துறை தரப்பில் வாதிடப்பட்டது.
இதன் பின்னர் நீதிபதிகள் இந்த வழக்கை திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கில் நளினி,முருகன் இருவரும் வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் வட்ஸ் அப் வீடியோ மூலம் பேச நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.