November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை அரசுக்கு எதிராக தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

பயன்பாட்டில் இல்லாத பழைய பேருந்துகளை கடலில் போடும் இலங்கை கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

கடற்றொழில் அமைச்சினால் மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் பெருக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் பவனைக்கு உதவாத பழைய பேருந்துகளை கடலில் இறக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

அந்த வகையில் அண்மையில் யாழ்ப்பாணத்தை அண்மித்த கடல்பகுதியில் பேருந்துகள் பல இறக்கப்பட்டன.

இந்நிலையில் இது மீன்பிடி தொழிலை பாதிக்கும் என்று தெரிவித்து வரும் தமிழக மீனவர்கள் இந்த வேலைத்திட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

தமிழக மீனவர்களின் மீன்பிடி தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்தோடு இலங்கை அரசு சர்வதேச கடல் எல்லைக்கு அருகில் இந்திய – இலங்கை மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் இடங்களான கச்சத்தீவு, நெடுந்தீவு, நயினாதீவு பகுதிகளில் பேருந்துகளை கடலில் இறக்கி வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பேருந்துகள் கடலில் இருக்கும் போது கடல் மாசு படுவதுடன் தமிழக மீனவர்கள் இந்திய கடற்பரப்பில் மீன் பிடித்தாலும் அவர்கள் விரிக்கும் மீன்பிடி வலைகள் காற்றின் வேகம் காரணமாகவும், கடல் நீரோட்டம் காரணமாக இலங்கை கடற்பகுதிக்கும் செல்லக் கூடும் எனவும், இதனால் படகுகள் மற்றும் வலைகள் சேதமடையும் என்றும் தமிழக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் உடனடியாக இலங்கை அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து ராமேஸ்வரம் பகுதியில் மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.