
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வந்த சிவசங்கர் பாபா தெற்கு டெல்லியில் உள்ள சித்தரஞ்சன் பார்க் பகுதியில் சிபிசிஐடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் புத்துப்பாக்கம் பகுதியில் உள்ள சுசில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபாவுக்கு எதிராக மாணவிகள் சிலரால் பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து சிவசங்கர் பாபா தொடர்பில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், குற்றச்சாட்டு தொடர்பாக செங்கல்பட்டு சிபிசிஐடி.பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சிவசங்கர் பாபா, உடல்நலக்குறைவு காரணமாக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இதன்போது அவரிடம் நேரடியாக விசாரணை நடத்தி கைது செய்து அழைத்துவரவென, நேற்று முன்தினம் இரவு விசேட பொலிஸ் பிரிவொன்று டேராடூன் சென்றிருந்தது.
இந்நிலையில் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவசங்கர் பாபா அங்கிருந்து தலைமறைவாகியிருந்தார். இதையடுத்து சிபிசிஐடி பொலிஸார் அவரைத் தேடி நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது அவர், தெற்கு டெல்லியில் உள்ள சித்தரஞ்சன் பார்க் பகுதியில் வைத்து இன்று காலை சிபிசிஐடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதாகியுள்ள சிவசங்கர் பாபா இன்று மாலை சென்னைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.