July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கடலில் பேருந்துகளை போடும் இலங்கையின் நடவடிக்கையை கண்டித்து தமிழக மீனவர்கள் போராட்டம் நடத்த முடிவு

இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் பாரம்பரிய மீன்பிடி கடற்பரப்பில் பயன்பாட்டில் இல்லாத பேருந்துகளை போட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவுடன் (14) நிறைவுக்கு வந்துள்ளது.இந்த மீன்பிடி தடை காலத்தை பயன்படுத்தி மீனவர்கள் தங்களது படகுகளை மராமத்தி பணி செய்து கொள்வது வழக்கம்.

இந்நிலையில் இந்தாண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக மீனவர்கள் மீன்பிடி தடை காலத்தில் தங்களது படகுகளை மராமத்துப் பணி செய்யாததால் மேலும் 15 நாட்கள் மீன் பிடிக்க செல்லாமல் படகுகளை மராமத்து பணி செய்து விட்டு வரும் 30 ஆம் திகதிக்கு மேல் மீன்பிடி கடலுக்கு செல்லலாம் என முடிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து ராமேஸ்வரம் மீன்பிடி டோக்கன் அலுவலக வளாகத்தில் விசைப்படகு மீனவர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.மீனவர்கள் நடத்திய கூட்டத்தில் தொடர்ந்து தமிழக மீனவர்களின் மீன்பிடி தொழிலை அளிக்கும் நோக்கத்தோடு இலங்கை அரசு சர்வதேச கடல் எல்லையில் இருந்து அருகே இந்திய இலங்கை மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் இடங்களான கச்சதீவு, நெடுந்தீவு, நயினாதீவு பகுதிகளில் பயன்பாட்டில் இல்லாமல் கைவிடப்பட்ட இலங்கை போக்குவரத்து துறைக்கு சொந்தமான பேருந்துகளை கடல் பரப்பில் இறக்கி வருகின்றனர்.

பேருந்துகளின் கூடுகளை கடலில் இருக்கும் போது கடல் மாசு படுவதுடன், தமிழக மீனவர்கள் இந்திய கடற்பரப்பில் மீன் பிடித்தாலும் அவர்கள் விரிக்கும் மீன்பிடி வலைகள் காற்றின் வேகம் காரணமாகவும் கடல் நீரோட்டம் காரணமாகவும் இலங்கை கடற்பகுதிக்கு செல்லக்கூடும். இதனால் படகுகள் மற்றும் வலைகள் சேதமடைந்து படகு ஒன்று சுமார் ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்பதால் உடனடியாக இலங்கை மீன்வளத்துறை இந்த திட்டத்தை கைவிட வேண்டும்.

அதேபோல், நாளுக்கு நாள் அதிகரித்துவரும் டீசல் விலையால் மீனவர்கள் தங்களது படகுகளை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் கலால்,சாலை வரிகளை நீக்கி மீனவர்களுக்கு உற்பத்தி விலையில் டீசல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் புதன்கிழமை (16) ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.