July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய பாதுகாப்பு துறை சார்ந்த ஆராய்ச்சிக்கு ரூ.499 கோடி ஒதுக்கீடு: ராஜ்நாத் சிங் ஒப்புதல்

(FilePhoto/Facebook)

இந்தியாவில் பாதுகாப்புத் துறைசார்ந்த ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பணிகள், புத்தாக்க சிந்தனைகளை உருவாக்கும் நடவடிக்கைகளுக்கு ரூ.499 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் 300 ஸ்டார்ட்அப்கள், சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தனி நபர் கண்டுபிடிப்பாளர்கள் பயன்பெறுவர் என்று இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இராணுவ தளபாடங்கள் உற்பத்தி மற்றும் விமானப் படைக்கான விமானங்களை உருவாக்குதல், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பணிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

இராணுவத்துக்கு தேவையான ஆயுதங்களை வெளிநாடுகளில் வாங்குவதை தவிர்க்க முடிவு செய்துள்ள மத்திய அரசு, உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்துள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1.75 இலட்சம் கோடிக்கு இராணுவத் தளபாடங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த உற்பத்தி பொருட்களில் ஒரு பகுதியை ரூ.35 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் உள்நாட்டிலேயே இராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

108 வகையான இராணுவ பாதுகாப்பு சாதனங்கள், பீரங்கிகளுக்கான என்ஜின்கள், ரேடார்கள், அடுத்த தலைமுறை கன்வெர்ட்டர்கள், ஏ.டபிள்யு.10எஸ் உள்ளிட்டவற்றை உள்நாட்டிலேயே தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த வாரம் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.

இராணுவத் திறன், பாதுகாப்பு புத்தாக்க நிறுவனமான டி.ஐ.ஓ.விற்கு இந்த திட்டம் வழங்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அரசு சுயசார்பு பொருளாதாரத்தை நோக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது