January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மீண்டும் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் முகுல் ராய்!

2017 ஆம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த முகுல்ராய் நேற்று (11) அதிரடியாக அந்தக் கட்சியிலிருந்து விலகி மீண்டும் தாய் கட்சியான திரிணாமுல் காங்கிரஸில் இணைந்துள்ளார்.

மம்தாவுக்கு அடுத்து மிகப்பெரிய தலைவராக பார்க்கப்பட்ட முகுல் ராயை, பா.ஜ.க.விலிருந்து பிரித்து மம்தா தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார்.

முகுல் ராய் பா.ஜ.க.வுக்கு செல்லும்பொழுது, தன்னுடைய மாநிலங்களவை எம்.பி. பதவியை இராஜினாமா செய்து விட்டுசென்றார். அங்கும் அவருக்கு தேசிய துணைத் தலைவர் பதவியும் வழங்கப்பட்டது.

ஆனாலும் கூட இவர் அதிரடியாக பா.ஜ.க.வை விட்டு வெளியேறி  ‘இந்தியாவின் ஒரே தலைவர் மம்தா’ என்று அவருக்கு புகழாரம் சூட்டி, தாய் கட்சியான திரிணாமுல் காங்கிரஸில் இணைந்து கொண்டார்.

இந்த நிலையில் பிரம்மாண்ட வெற்றி பெற்று 3 ஆவது முறையாக ஆட்சியைப் பிடித்திருக்கும் மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தில் இது நாள்வரை பா.ஜ.க நடத்தி வந்த அரசியல் விளையாட்டுகளுக்கு, பதில் விளையாட்டை ஆரம்பித்து இருக்கிறார்.

இதேவேளை, திரிணாமுல் காங்கிரஸில் இணைந்த முகுல் ராய்க்கு அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.