சசிகலா மீதான இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு பற்றி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதேநேரம், ஊழல் தடுப்பு படை நடத்திய விசாரணையின் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க 4 மாதம் அவகாசம் வழங்கும்படி கோரப்பட்டதை ஏற்க மறுத்த நீதிபதிகள், 2 மாதங்கள் அவகாசம் வழங்கினர். அதற்குள் ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் முழு விசாரணையை முடித்து இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், சசிகலா கர்நாடக சிறையில் அமைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் சசிகலா சிறைச்சாலையில் இருந்த காலத்தில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
சசிகலா சிறையில் இருந்தபோது சொகுசு வசதிகளை பெறுவதற்கு அப்போதைய சிறை அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டதாக முன்பு ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்திய ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். வினய்குமார் தலைமையிலான குழு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்திருந்தது.
இதேவேளை இலஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்திருந்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சமூக ஆர்வலர் ஒருவர் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் , ஊழல் தடுப்பு அதிகாரிகள் விசாரணை இறுதி அறிக்கையை 2 மாதத்திற்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.