July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் அனுமதி கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் தொழில் நண்பரான ‘ஒகுஜன்’ நிறுவனம் ,அமெரிக்காவில் இந்த கோவாக்சின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது.

ஆனால் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்க முடியாது என  அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) நிராகரித்துள்ளது.

‘கூடுதலாக பரிசோதனைகளை நடத்தி முடிவுகளை தர வேண்டும்.அதன் பின்னர் தான் பயோ உரிமை விண்ணப்பத்திற்கு தாக்கல் செய்ய முடியும்’ என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு பரிசோதனை நடத்தி ஒப்புதல் வழங்கப்பட்டால் மட்டுமே அமெரிக்காவில் அனுமதி கிடைக்கும் என கூறப்படுகிறது.  ஆகவே கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்காவில் முழுமையான அனுமதி கிடைக்கவில்லை.

இதேவேளை இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டபோது 3 ஆவது கட்ட பரிசோதனை குறித்த தகவலை வெளியிடாமல் இதை மக்களிடம் பயன்படுத்தக்கூடாது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வந்தன.

ஆனால், முதல் கட்ட ஆய்வு முடிவுகளில் கோவாக்சின் தடுப்பு மருந்தால் அதிக பக்க விளைவுகள் ஏற்படவில்லை.குறிப்பாக கோவிஷீல்டுடன் ஒப்பிட்டால் காய்ச்சல், தலைவலி போன்றவையும் வெகு சிலருக்குத்தான் ஏற்படுகிறது என்று கூறப்பட்டது.

அதேநேரம், அறிவியல்பூர்வமான தரவுகள் தேவை என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.