(Photo:JPNadda/ Twitter)
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் 200 கோடி கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் என பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
அத்தோடு நாடு முழுவதும் கொரோனா பரிசோதனைக்கென 1500 பரிசோதனைக் கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அருணாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க அலுவலகத்தை காணொளி மூலம் திறந்து வைத்து பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது, 9 மாதங்களில், இந்தியா இரண்டு தடுப்பூசிகளை உற்பத்தி செய்திருப்பது மிகப்பெரிய சாதனை.மேலும் ஒக்சிஜன் உற்பத்தி 900 மெட்ரிக் டன்னில் இருந்து 9446 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவில் 13 நிறுவனங்கள் தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ள அவர், இந்த ஆண்டு இறுதிக்குள் 19 நிறுவனங்களாக அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு உற்பத்தி நிறுவனங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் இந்த வருட இறுதிக்குள் 200 கோடி தடுப்பூசிகள் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாடு முழுவதும் கொரோனாவை எதிர்கொள்ள தன்னைத் தானே மாற்றியமைத்துக் கொண்டுள்ளதாகவும் மோடி ஆட்சியில் தான் வட, கிழக்கு மாநிலங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அங்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் ஜே.பி நட்டா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.