மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வை எதிர்த்து மூன்றாவது முறையாக அசுர வெற்றி பெற்றுள்ள மம்தா பானர்ஜி பதவி ஏற்றதும் அங்கு காட்சிகள் மாறத் தொடங்கி விட்டன.
அதற்கு எடுத்துக்காட்டாக மேற்கு வங்கத்தில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு கோரிக்கை என்று பா.ஜ.க தலைவர்கள் கூறி வந்தனர்.
ஆனால் முன்னாள் மேற்குவங்க அமைச்சரும் முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான தற்போது பா.ஜ.க.வில் உள்ள ரஜிப் பானர்ஜி இதுபற்றி கூறுகையில், இது மக்களுக்கான நல் விஷயமாக இருக்காது என்று ஒரு வாதத்தை முன்வைத்தார் .
மம்தா பானர்ஜியின் தேர்தல் வெற்றிக்குப் பிறகு இவருடைய அணுகுமுறையும் மாறி இருக்கிறது.
இவர் இப்படி என்றால் மற்றொருபுறம் முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், மம்தாவின் நம்பிக்கைக்குரியவருமான முகுல் ராய்,தற்சமயம் பி.ஜே.பி.யில் துணைத் தலைவராக உள்ளார்.
இவர் சில தினங்களுக்கு முன்னர் கொல்கத்தாவில் நடைபெற்ற பி.ஜே.பி.யின் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது பி.ஜே.பி.யினர் மத்தியில் ஒரு சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.
இதனிடையில் தாய் கட்சியான திரிணாமுல் காங்கிரஸிலிருந்து வெளியேறிய 30 க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்.பி.க்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள் .
இவர்கள் எப்போது வேண்டுமானாலும் தாய் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொள்ளலாம் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக கூறியிருப்பது பி.ஜே.பி.யினர் வட்டாரத்தில் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையில் முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மம்தா பானர்ஜியை எதிர்த்துப் போட்டியிட்டவருமான பி.ஜே.பி.யை சேர்ந்தவருமான சுவேந்து அதிகாரி டெல்லி சென்று,பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி நட்டவையும் அமித்ஷாவையும் சந்தித்துப் பேசியுள்ளார்.
வங்கத்தில் மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 213 இடங்களை பிடித்து பிரம்மாண்ட வெற்றி பெற்றிருக்கும் திரிணாமுல் காங்கிரஸிலிருந்து பி.ஜே.பி.யால் அழைத்து செல்லப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் சிறிது சிறிதாக தாய் கட்சியை நோக்கி வருவதற்கான அறிகுறியாகவே மேற்கண்ட சம்பவங்கள் காட்சியளிக்கின்றன.
இதனிடையில் முகுல் ராயை தக்க வைக்கும் விதமாக பிரதமர் மோடி நேரடியாக அவருடன் தொலைபேசியில் உரையாடி இருக்கிறார்.மற்றொரு புறம் முகுல் ராயுடைய மனைவிக்கு உடல்நிலை சரியில்லை, அவரைப் பார்த்துக் கொள்வதற்காகவே அவர் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று பி.ஜே.பி தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.
இதையும் மோடி நேரடியாக தொலைபேசியில் பேசியதையும் வைத்துப் பார்த்தால் மம்தா தனது அதிரடி ஆட்டத்தை துவங்கிவிட்டார் என்றே தெரிகிறது.