July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”பருவகால தொற்றாக கொரோனா மாறலாம்”; எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர்

பல அலைகளுக்கு பிறகு பருவகால தொற்றாக கொரோனா மாற வாய்ப்புள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

1918-ல் ஸ்பானிஷ் காய்ச்சல், 2009-ல் பன்றிக் காய்ச்சல் வந்த போது அவை , பல அலைகளுக்கு பிறகு பருவகால தொற்றாக மாறியதாகவும், அதேபோன்று கொரோனாவும் மாற வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .

மேலும் கொரோனா மூன்றாவது அலையால் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பது தவறான தகவலாகும் என அவர் கூறியுள்ளார்.

இதை நிரூபிப்பதற்கான எந்தவொரு தரவும் இந்திய அளவிலோ, சர்வதேச அளவிலோ இல்லை என்று எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் நோய் அலை வருவதை தடுப்பதற்கு முறையான கொரோனா நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம் எனவும் எய்ம்ஸ் மருத்துவர் தெரிவித்திருக்கிறார்.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் போது, கொரோனா நடத்தை விதிமுறைகளை மக்கள் பின்பற்றாமல் போவதால் புதிய அலை உண்டாவதாக கூறியுள்ளார்.

கொரோனா இரண்டாம் அலையின்போது பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 60 முதல் 70 சதவீதம் பேருக்கு இணை நோய் அல்லது குறைந்தளவு நோய் எதிர்ப்பு சக்தி இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

சாதாரண பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகள் மருத்துவமனைகளுக்கு வராமலேயே குணமடைந்துள்ளனர்.

எதிர்காலத்தில் அலைகள் உருவாவதை தவிர்க்க வேண்டுமானால் , தகுதியுள்ள அனைத்து மக்களும் தடுப்பூசி பெறும் வரை கொரோனா விதிமுறையை கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

சுவாச பாதிப்பு ஏற்படுத்தும் வைரஸான கொரோனா, பல அலைகளாக தாக்கும் அபாயம் இருப்பதாகவும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார்.