July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மொழி பாகுபாட்டை நிறுத்துங்கள்’; டெல்லி மருத்துவமனையின் சுற்றறிக்கைக்கு ராகுல் காந்தி கண்டனம்

இந்திய தலைநகர் டெல்லியில் இயங்கி வரும் மிகப்பெரிய மருத்துவமனையான டெல்லி ஜி.பி. பண்ட் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்களை ‘மலையாளத்தில் பேசக் கூடாது’ என்ற நிர்வாகத்தின் சுற்றறிக்கைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

குறித்த மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், செவிலியர்கள் மலையாளத்தில் பேசக்கூடாது எனவும் ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும். இல்லையேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு கண்டனம் தெரிவித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் தளத்தில் ‘மற்ற இந்திய மொழிகளை போலவே மலையாளமும் இந்திய மொழி! மொழி பாகுபாட்டை நிறுத்துங்கள்!’ என குறிப்பிட்டுள்ளார்.

மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் இந்த மருத்துவமனையில் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

குறிப்பாக, மலையாள மொழி பேசும் கேரள செவிலியர்கள் அதிகளவில் பணிபுரிந்து வருவதாகவும், அதன் காரணமாக, மருத்துவமனை வளாகத்தில் கேரள செவிலியர்கள் மலையாள மொழியில் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் மலையாள மொழி தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் ஒன்று அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

நோயாளியின் புகாரை மூலமாக வைத்து தற்போது மருத்துவமனை நிர்வாகம் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் ஹிந்தி திணிப்பு முயற்சிக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், மருத்துவமனையின் இந்த சுற்றறிக்கை வலுத்த எதிர்ப்பை பெற்றுள்ளது.