October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘த பேமிலி மேன் 2’ இணையத் தொடரை தடுத்து நிறுத்துங்கள்; சீமான்

தமிழர்களுக்கெதிரான த பேமிலி மேன் 2 இணையத் தொடரை தடுத்து நிறுத்துமாறு சீமான் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

ஈழ விடுதலைப் போராட்டத்தையும், தமிழர்களையும் இழிவாக சித்தரித்து அதனை தவறாக காட்சிப்படுத்தி இந்த தொடர் எடுக்கப்பட்டிருப்பதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் ,ஒருங்கிணைப்பாளர் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

ஈழப்போர் முடிவுற்று, 11 ஆண்டுகளை கடந்தும் இனப்படுகொலைக்கு எவ்விதப் பன்னாட்டு போர்க்குற்ற விசாரணையோ, பொது வாக்கெடுப்போ கிடைக்கப்பெறாத தற்கால சூழலில் அறப்போராட்டங்களின் வாயிலாகவும், சட்ட போராட்டங்களின் வாயிலாகவும், ஐ.நா.வில் நடக்கும் அமர்வுகளின் வாயிலாகவும், உலக நாடுகளில் பரவி வாழும் தமிழர்களின் அணிச் சேர்க்கை மூலமாகவும் தமிழர்கள் எங்களுக்கு இழைக்கப்பட்டுள்ள கொடும் அநீதியைப் பன்னாட்டு சமூகத்திற்கு விளக்கி, அதற்கான நீதிகோரி நிற்கிறோம்.

தமிழர்களை சீண்டும் நோக்கில் திட்டமிட்ட வன்மத்தோடு எடுக்கப்பட்டுள்ள, தி பேமிலி மேன் 2 எனும் இணையத் தொடரில் வீரம்செறிந்த ஈழ விடுதலை போராட்டத்தை மலினப்படுத்தி, கொச்சைப்படுத்தும் வகையில் வைக்கப்பட்டிருக்கிற சித்தரிப்புகளும், காட்சியமைப்புகளும் குறித்து கேள்வியுற்று பேரதிர்ச்சியடைந்தேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

ஆகவே, தமிழர்களையும், தமிழர்களின் வீரம்செறிந்த போராட்டத்தையும் மிக மிக இழிவாக சித்தரித்து அதனைத் தவறாக காட்சிப்படுத்தியிருக்கும், ‘தி பேமிலி மேன் 2’ இணைய தொடரை முற்றாக தடைசெய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யாவிட்டால், சட்டரீதியாகவும், சனநாயக பூர்வமாகவும் அதற்கெதிராக களமிறங்கி தடுத்து நிறுத்துவோமென எச்சரிக்கிறேன் என சீமான் கூறியுள்ளார்.

தமிழர்கள் பக்கமிருக்கும் நியாயத்தையோ, தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியையோ, அங்கு நடந்த உண்மைச்செய்திகளையோ, ஈழ விடுதலைப்போராட்டத்தின் பெரும் வரலாற்றையோ பதிவு செய்ய வாய்ப்பிருந்தும், அதனைச் செய்யாது தமிழர்களுக்கெதிராக நச்சுக்கருத்தோடு ஒரு படைப்பை உருவாக்கம் செய்து சிங்களர்களின் தரப்பு வாதத்திற்கு வலு சேர்க்கும் வகையிலான கருத்துருவாக்கங்களை கொண்டுள்ள இதுபோன்ற இணையத் தொடர்கள் முழுக்க முழுக்கத் தடைசெய்யப்பட வேண்டும்.

முதல் பாகத்தில் இசுலாமியர்களையும், இரண்டாவது பாகத்தில் இப்போது தமிழர்களையும், மூன்றாவது பாகத்தில் வங்காளிகளையுமென தொடர்ச்சியாக தேசிய இனங்கள் மீதும், இம்மண்ணின் மக்கள் மீதும் உண்மைக்கு மாறான திட்டமிட்ட அவதூறுகளை கட்டவிழ்த்துவிட்டு, பச்சைப்பொய்களை காட்சிகளாக உருவாக்கி, வரலாற்று திரிபுகளை தொடர்ச்சியாக செய்து வரும், ‘தி பேமிலி மேன்’ இணையத்தொடரை முற்றாக தடைசெய்யவும், நிறுத்தவும் செய்ய வேண்டியது இன்றியமையாத தேவையாகும்.

இத்தகைய இணைய தொடருக்கு தமிழக அரசு தனது கண்டனத்தை பதிவுசெய்து, அதற்கு எதிர்ப்பு நிலையினை எடுத்து, தடைசெய்ய கோரியும்கூட அதனை ஏற்காத மத்தியில் ஆளும் பாஜக அரசின் நயவஞ்சக செயல் அப்பட்டமான தமிழர் விரோத போக்காகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.