‘வாருங்கள், மாற்றத்தை உருவாக்குவோம்,அடுத்த முறை ஒரு வங்காளியை பிரதமராக்குவோம்’ என்ற வாசகம் மேற்கு வங்கத்தில் இப்போது பிரபலமாகி வருகிறது .
இதற்கு காரணம் அண்மையில் மேற்கு வங்கத்தில் நடந்த சட்டசபை தேர்தல் ஆகும்.
பி.ஜே.பி.யின் உச்சகட்ட தலைவர்கள், அவர்களுடைய பிரசாரங்கள், அவர்களது தேர்தல் உத்திகள்,மற்றும் திரிணாமுல் காங்கிரஸிலிருந்து முக்கிய தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை கட்சியை விட்டு வெளியேற்றி,அவர்களை திரிணாமுல் காங்கிரஸுக்கு எதிராகவே தேர்தலில் நிறுத்தியது என எல்லா தடைகளையும் சவால்களையும் தனி ஒரு பெண்ணாக எதிர்த்து நின்று வெற்றி கண்டார்.
வீல் சேரில் அமர்ந்தபடி மாநிலமெங்கும் பிரசாரம் செய்து, மிகப்பெரும் வெற்றியை பெற்று தொடர்ச்சியாக மூன்றாவது முறை முதல்வராக பதவியேற்றார் மம்தா பானர்ஜி.
அக்னி கன்னி என்று மேற்குவங்க மக்களால் அழைக்கப்படும் மம்தா பானர்ஜியை,மோடியை எதிர்த்து களம் காண வைப்பதில் மேற்குவங்க வாசிகள் மிகவும் ஆர்வமாகவும் மும்முரமாகவும் உள்ளனர்.
வாருங்கள் மாற்றத்தை உருவாக்குவோம்,ஒரு வங்காளியை பிரதமர் ஆக்குவோம் என்ற வாசகத்தை முன்னிறுத்தி ஃபேஸ்புக்கில் ஒரு பக்கத்தை திறந்து அதை பிரபலப்படுத்தி வருகிறார்கள் மேற்குவங்க வாசிகள் .
தேர்தல் பரப்புரையின் போது தேவைப்பட்டால் டெல்லி வரை சென்று பிஜேபி அரசை முடித்துவிட்டு வருவேன் என்று சீறிய வங்கத்து பெண்புலி மம்தா பானர்ஜி இந்த வாய்ப்பை எப்படி பயன்படுத்த போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.